Wednesday 5 June 2013

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற....




டந்த மூன்று ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடத்தை பெண்களே பெற்று வருகின்றனர். 2010 ஆண்டுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த திவ்ய தர்ஷினியும், 2011-ஆம் ஆண்டுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படித்த ஷேனா அகர்வாலும், 2012 ஆண்டுத் தேர்வில் திருவனந்த புரத்தை சேர்ந்த ஹரிதா வி. குமாரும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது. 

இந்தாண்டு தேர்வில் முதலிடத்தை பெற்ற ஹரிதா வி. குமார் ஏற்கெனவே ஐ.ஆர். எஸ். பணி வாய்ப்பை பெற்று பரீதாபாத்தில் அமைந்துள்ள கஸ்டம்ஸ் & கலால் வரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்றுவருபவர். இதற்கிடையில் மற்றொரு முயற்சியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தை சேர்ந்த ஒருவர் அகில இந்திய அளவில் தற்போதுதான் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1991-இல் கேரளத்தை சேர்ந்த ராஜூ நாராயணசாமி முதலிடத்தை பிடித்தார். இவர் இன்று கேரளாவில் சிறந்த அரசு அதிகாரி என்ற பெருமை பெற்றவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தாயகோடுவில் உள்ள சங்கீத் நகரில் வசிக்கும் ஹரிதா வி. குமார் நமது பொது அறிவு உலகம் இதழுக்காக தனது தேர்வு அனுபவங்களையும் வெற்றிப்பெற்ற வழி முறைகளையும் பகிர்ந்துக்கொண்டார். இவரின் பேட்டியை பொது அறிவு உலகம் இதழில் அறிவியல் கட்டுரையை எழுதிவருபவரும் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் பணிபுரிபவருமான எஸ்.விஸ்வநாதன் தொகுத்தளித்துள்ளார்.   

* வாழ்த்துகள். உங்களின் இந்த வெற்றி கேரளாவிற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

அன்று   எனது நண்பர் நான் முதலிடத்தில் வந்ததாகவும் உடனே யு.பி.எஸ்.சி சைட்டை பார்க்கவும் சொன்னார். முதலில் இதை நான் நம்பவில்லை. ரிசல்ட் லிஸ்ட்டை பார்த்தேன். நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன். எப்படியவது நூறு இடத்திற்குள் வரவேண்டும் என ஆசை வைத்திருந்தவளுக்கு முதலிடத்தில் வந்தது எப்படி இருக்கும். எனது வெற்றியை கேரளா மாநிலமே கொண்டாடுகிறது. என்னுடைய இந்த வெற்றியை கேரளாவுக்கு அர்பணிக்கிறேன்.   

* உங்களின் குடும்பத்தை பற்றி கூறுங்கள்......

தந்தை ஆர்.விஜயகுமார். தாய் சித்ரா. இரண்டு சகோதரர்கள் அதுவும் இரட்டை சகோதரர்கள் சத்ஹிர்த், சதார்ஷ் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். சகோதரி ஜாஸ்மின் பள்ளி ஆசிரியை. எனது குடும்பம், எனது ஆசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உதவியும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். 

* படித்ததெல்லாம்.......

திருவனந்தபுரம் நெய்யாற்றங்கராவில் உள்ள செயிண்ட் தெரஸா கான்வெண்டில் ஆரம்பக் கல்வியை முடித்தேன். பின்னர் அங்கிருந்த அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். அதன்பிறகு பார்டன் ஹில்லில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றேன். 

* இன்ஜினியரிங் படித்தவர்கள் பெரும்பாலும் சாப்ட்வேர் வேலைக்கு போவார்கள் நீங்கள் ஐ.ஏ.எஸ் படித்தது ஏன்?

எனக்கு பள்ளிப் படிப்பிலிருந்தே இலட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவதென்று. எனது தந்தையும் தொடர்ந்து ஆலோசனை கொடுத்துக்கொண்டே வந்தார். இருந்தாலும் ஒருவேளை சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெறவில்லையெனில் சாப்ட்வேர் வேலைக்கு சென்றுவிடுவது என்ற முடிவில் தான் இன்ஜினியரிங் படித்தேன்.   

* இந்த தேர்வுக்கு தயார் செய்தவிதத்தைக் கூறமுடியுமா?

2007- இல் எனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன். முதல் முயற்சியில் மெயின் தேர்வில் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 2010 இல் இரண்டாவது முயற்சி யில் 179 ஆவது ரேங்க் பெற்றேன். ஐ.பி.எஸ் கிடைத்தது. போலீஸ் வேலை வேண்டாமென ஐ.ஆர்.எஸ் தேர்ந் தெடுத்தேன். இருந்தாலும் எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை. அதனால் மூன்றாவது முறையாக சிவில் தேர்வை எழுதி 290-ஆவது ரேங்க் பெற்றேன். மிகவும் பின்தங்கிப் போனதை உணர்ந்தேன். இருந்தாலும் விடா முயற்சியாக கடைசி முறையாக சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதி விடுவது என மிகவும் கவனமுடன் சிறப்பாக தயார் செய்தேன். என் நான்காவது முயற்சியில் எனது லட்சியம் நிறைவேறிவிட்டது.

* இந்த தேர்வில் விருப்பப்பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?

மெயின் தேர்வில் எனது விருப்பப்பாடங்கள் நான் படித்திராத பொருளாதாரம், மலையாள இலக்கியம். இந்த பாடங்களை பட்டப்படிப்பில் படிக்கவில்லை  என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள். அதிலும் மலையாள இலக்கியம் எனது சுவாசம். இந்தியா அளவில் மலையாள இலக்கியம் தரமானவை. எனது கல்லூரி வாழ்க்கையில் இன்ஜினியரிங் புத்தகங்களுக்கு அடுத்து அதிக அளவில் மலையாள நாவல்களை படித்துள்ளேன். அதிலும் நான் எழுத்தாளர் எம்.டி.வாசு தேவனின் வாசகி. அவரின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல இந்துமேனன், விலோபில்லியின் கவிதை பிடித்தமானவை. இந்த நிலையில் சிவில் மெயின் தேர்வுக்கு மலையாள இலக்கியம் படிப்பதில் சிரமமில்லாமல் படித்தேன். அடுத்த விருப்பப்பாடமான பொருளாதாரம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.  ஆனால் பொருளாதரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எனது தோழி, பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்யும் நண்பர், பொருளாதார பேராசிரியர் என எனக்காக சிரமம் பாராமல் கற்றுத்தந்தனர். இதனால் பொருளாதரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது.
  
* மெயின் தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

 நான் ஆரம்பத்தில் கேரளா மாநில சிவில் சர்வீசஸ் அகாடமியில் பயிற்சி பெற்றேன். அங்கு மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மிகவும் உதவியாக இருந்தது. மலையாள இலக்கியம், பொருளாதாரம் பாடங்களுக்கு நல்ல நூல்கள் கிடைத்தன. சிறந்த பொருளாதார பேராசிரியர் சிறப்பாக கற்பித்தனர். இவை மிகுந்த உதவியாக இருந்தன. அனைத்து பாடங்களையும்  நன்றாக ஆழமாக படித்து முடித்தவுடன் தேர்வு எழுதிப் பார்ப்பேன். எனது கடைசி தேர்வு முயற்சியில் தொடர்ந்து அதிகளவில் எழுதி பயிற்சி செய்தது இந்த வெற்றியைப் பெற மிக உதவிகரமாக இருந்தது.

* நேர்முகத்தேர்வு எப்படியிருந்தது?

நேர்முகத் தேர்வு பொருத்தவரை ஐ.ஆர்.எஸ் பயிற்சியில் என்னுடன் இருந்த நண்பர்களின் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். அதனால் சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள முடிந்தது. நான் மலையாள இலக்கியம், பொருளாதாரம் எடுத்ததால் அது சம்பந்தமான கேள்விகள் கேட்டனர். அடுத்து கேரளா மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றிக் கேட்டனர். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருப்பதை கூறினேன். முக்கியமாக காசர்கோடு பகுதியில் நிலவும் எண்டோ சல்பான் பிரச்சினை பற்றி கேட்டனர். அதேசமயம் எனக்கு மோகினியாட்டம், பழைய மலையாள பாடல்கள் பிடிக்கும் என்பதால் அதை பற்றிய கேள்விகளையும் கேட்டனர். நாட்டை உலுக்கும் நான்கு முக்கிய பிரச்சினைகள் பற்றி கேட்டனர். ஊழல், வறுமை, பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இன்மை, அதிகரித்து வரும் வேலையின்மை, மேலும் வெளிப்படையான நிர்வாகம் பற்றியும் பதிலளித்தேன்.

* சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனைகள்...

விருப்பப்பாடங்களை உங்களுக்கு பிடித்தமானதாகவும் தயார் செய்வதில் சிரமமில்லாத பாடங்களையும் தேர்ந்தெடுங்கள். முறையாக திட்டமிடுங்கள். திட்ட மிட்டதை முடிந்தவரை சரியான முறையில் பின்பற்றுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தி படியுங்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். தன்னம்பிக்கையும் கடுமையான உழைப்பும் இருந்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிப் பெறலாம்.

நன்றி பொது அறிவு உலகம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...