Wednesday 17 April 2013

பிளஸ் டூவுக்குப் பின் என்ன படிக்கலாம்?



பிளஸ் டூ தேர்வுகள் முடிந்து விட்டன. பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் இருக்கும் முக்கியக் கேள்வி, அடுத்து என்ன படிக்கலாம் என்பதுதான். இதுபோன்ற தகவல்கள் முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், இந்தப் படிப்பில் சேர்ந்திருக்கலாமே என்று நினைக்கும் மாணவர்களுக்காக பல்வேறு படிப்புகள் பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன. படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. எந்தப் பாடமாக இருந்தாலும் எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொருத்துதான் எதிர்காலம் இருக்கிறது. பிளஸ் டூ மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேருவதற்கான வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் இதோ...

பிளஸ் டூ தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அறிவியல் படிப்புகளைப் படிக்கின்ற மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. பிளஸ் டூ படித்த சிறந்த மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகளை முக்கியத்துவம் வாந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். நாட்டில் உள்ள பல்வேறு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் குறித்த சிறிய அறிமுகம் இதோ...

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனத்துக்கு போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வளாகங்கள் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சியை வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் உயிரியல், வேதியியல், எர்த் சயின்ஸ், கணிதம், இயற்பியல் மற்றும் இது தொடர்பான பாடப்பிரிவுகளில் பிஎஸ்-எம்எஸ் என்ற ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம். இங்கு படிக்கச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கேவிபிஒய் அல்லது இன்ஸ்பையர் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையின்கீழ் செயல்படும் முக்கியக் கல்வி நிறுவனங்கள். இங்கு உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளைப் படிக்கலாம். உதவித்தொகையுடன் கூடிய இந்தப் படிப்பில் சேருவதற்கு நெஸ்ட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். விஸ்வபாரதியில் உள்ள இன்டகிரேட்டட்  சயின்ஸ் எஜுக்கேஷன் ரிசர்ச் சென்டரில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளிலும் இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு இன்ஸ்பையர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை கிடைக்கும். பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

பிலானி, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (பிட்ஸ்) வளாகங்களில் கணிதப் பாடத்தில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி ஆனர்ஸ் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேர ‘பிட்சாட்’ என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள மேத்மேட்டிக்ஸ் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் துறையில் கணித அறிவியல், சிஸ்டம்ஸ் பயாலஜி, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் சயின்ஸ், லைஃப் சயின்ஸ், மீடியா அண்ட் கம்யூனிக்கேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.

ஐஐடிக்களில் சேருவதற்கான அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் பல்வேறு ஐஐடிக்களில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். மும்பை ஐஐடியில் வேதியியலிலும் கரக்பூர் ஐஐடியில் அப்ளைடு ஜியாலஜி, வேதியியல், எக்ஸ்புளோரேஷன் ஜியோ பிசிக்ஸ், மேத்மேட்டிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டிங், இயற்பியல் ஆகிய பாடங்களிலும் ரூர்க்கி ஐஐடியில் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களிலும் தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் கல்வி நிலையத்தில் மேத்மேட்டிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டிங் பாடத்திலும் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிக்கலாம். கான்பூரில் உள்ள ஐஐடியில் வேதியியல், மேத்மேட்டிக்ஸ் அண்ட் சயின்டிஃபிக் கம்ப்யூட்டிங், இயற்பியல் ஆகிய பாடங்களில் நான்கு ஆண்டு பிஎஸ் படிப்பிலும் சேரலாம்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகள் உள்ளன. அத்துடன் பிஎஸ்சிபிஎட் என்ற நான்கு ஆண்டு படிப்பும் உள்ளது. ஜார்க்கண்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகள் உள்ளன.

ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகள் உள்ளன. வேதியியல், பொருளாதாரம், கணிதம், இயற்பியல் பாடங்களில் ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சிபிஎட் படிப்பு உள்ளது. ஒடிசாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி உள்ளது. இப்படிப்புகளில் சேர புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ‘கியூசெட்’ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

தரமான கல்வியியல் படிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கவுன்சிலின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டதுதான் ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் எனப்படும் மண்டலக் கல்வியியல் இன்ஸ்டிட்யூட். ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், மைசூர் ஆகிய இடங்களில் இந்த மண்டல மையங்கள் உள்ளன. மைசூரில் உள்ள மண்டல மையத்தில் பிஎஸ்சிஎட் என்ற நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளையோ, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளையோ தாவரவியல், விலங்கியல், வேதியியல் பாடப்பிரிவுகளையோ எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இந்தக் கல்வி நிலையத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய  பாடப்பிரிவுகளில் எம்எஸ்சி  எட்  என்ற ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் படிப்பும் உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் இப் படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் அறிவியல் துறையில் தங்களது முத்திரையைப் பதிக்கலாம். Thnx Puthiya Thalaimurai.


1 comments:

Vaidheeswaran said...

ஐநா சபையில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தூதரகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், நாட்டிற்கே நிதி மேலாண்மை செய்யும் நிதி அமைச்சகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தொல்லியல் துறையில் உள்ளவர் என்ன படித்திருப்பார், வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் என்ன படித்திருப்பார், தடயவியல் துறைக்கு என்ன படிக்க வேண்டும்? வானொலி/தொலைகாட்சி நிலையங்களில் பணியாற்ற என்ன படித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் சட்டம் படித்திருக்க வேண்டுமா? மருத்துவமனையில் பணிசெய்பவர்கள் அனைவரும் மருத்துவம் படித்திருக்க வேண்டுமா?இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பாமல் குருட்டுத் தனமாக அனைவரும் விரும்பும் ஒரு படிப்பை சுயவிருப்பம் இல்லாமல், படித்து முடித்தபின் என்ன வாய்ப்புகள், விளைவுகள் என்று எண்ணாமல் முடிவு எடுக்கக் கூடாது.
http://vaidheeswaran-rightclick.blogspot.in/2012/11/blog-post.html

Related Posts Plugin for WordPress, Blogger...