Thursday 11 April 2013

22 இலட்சம் மாணவர்கள் என்ன ஆனார்கள்- விட்டுப்போன மர்மம் என்ன?



தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.
நகர்ப்புறங்களில்...: தமிழகத்தில், சமீப காலமாக, அரசு துவக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில், கடும் சரிவு இருந்து வருகிறது. அதிலும், நகர்ப்புறங்களில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஒற்றை இலக்கங்களில், மாணவர் எண்ணிக்கையை கொண்டு இயங்கும் நிலையில் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறையும் பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதத்தை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

நகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், அதே பள்ளியில் நீடிக்கவே விரும்புகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும், அவற்றை, கணக்க ஏடுகளில் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். பள்ளி கணக்கேடுகளில், 30 மாணவர் இருந்தாலும், உண்மையில், அந்த பள்ளிக்கு, 15 மாணவர்கள் மட்டுமே, வந்து கொண்டிருப்பர். இந்த நிலை, பல அரசு பள்ளிகளில் காணப்படுகிறது.

இப்படி கள்ளத்தனமாக காட்டப்படும் மாணவர்களுக்கான சலுகைகளை, மற்றும் தகவல் தொகுப்புக்காக, அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. கடந்த ஆண்டில், கல்வி தகவல் மேலாண்மை முறை மாணவர் விபரங்களையும், படிவங்களில் சேகரித்து, அவற்றை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டது. இப்படிவத்தில், ஒவ்வொரு மாணவரின், ஜாதி, மதம், பிறந்த தேதி, ரத்த வகை, போட்டோ உள்ளிட்ட, 36 வகையான தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள்: ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனியே, "யூசர் ஐடி' மற்றும், "பாஸ்வேர்டு' வழங்கி, அனைத்து விவரங்களையும், "ஆன்லைனில்' பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதில், தனியார் பள்ளிகளும், மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதால், தனியார் பள்ளியில் சேர்ந்திருந்தாலும், அரசு பள்ளியிலேயே கணக்கில் வைத்திருக்கும், "போலி' மாணவர்கள் விவரங்களை, பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

விபரம் சரிபார்க்கும் போது, மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால், உண்மையில் பள்ளிக்கு வரும் மாணவர்களது விவரங்களை மட்டுமே, ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த பணி முடிவடைந்துள்ளது. கணக்கு ஏடுகளில், 1.35 கோடி மாணவர்கள் உள்ள
நிலையில், 1.13 கோடி மாணவர்களின் விபரம் மட்டுமே, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலி பட்டியல்: கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதால், போலி மாணவர் பட்டியலை, தொடர்ந்து கண்டுபிடிக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்ற பயத்தில், 22 லட்சம் பேரின் விபரங்களை ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை. அதே நேரம் ஒரு சில ஆசிரியர்கள், "டபுள் என்ட்ரி' ஆனாலும் பரவாயில்லை என, போலி பட்டியலையும் பதிவு செய்துள்ளனர். இவற்றை சரி செய்யும் போது, இன்னும் பல லட்சம் மாணவர்கள் விடுபடும் நிலை உள்ளது. தனியார் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பிரச்னை இல்லை.

தற்போது, இவற்றை சரி செய்ய, மீண்டும் ஒரு வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஆன்லைனில் உள்ள விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இவை நிறைவடையும் நிலையில், பள்ளிகளில் உண்மையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, துல்லியமாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...