Monday 20 May 2013

பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?


பயமுறுத்தும் இந்தத் தேர்வு பூதத்திடமிருந்து நம் குழந்தைகளை எப்படியாவது விடுவிக்க முடியாதா என்பது ஒரு சில பெற்றோர்களின் ஏக்கமாக இருக்கிறது. அது மட்டுமா இந்தத் தேர்வு முறையையே மாற்றினால்தான் என்ன? என்பதும் அண்மைக்காலமாக கல்வியாளர்களிடம் முன் வைக்கப்படுகிற வினாவாக இருக்கிறது. இவற்றைப்பற்றிக் கொஞ்சம் மனம் திறந்து விவாதிப்போமா?

இன்றைய தேர்வு முறை

இன்றைய தேர்வு முறை மாணவர்களிடையே அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும், தன்னோடு பயில்பவர்களைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகம் பெறவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இத்தகைய போக்கு, கல்வியில் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் என்றால், கடந்த சில தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் இத்தகைய தேர்வு முறையையே கைவிட்டுவிட்டால் என்ன என்ற சிந்தனைக்கு வழிகோலியிருக்கின்றன.

தேர்வு குளறுபடிகள் 

விடைத்தாள்கள் தீப்பற்றி எரிவதும், காணாமல் போவதும் தொடர்வண்டியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அந்த பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்று நம் அலுவலர்கள் ஆலோசித்து முடிவெடுப்பதும் கேலிக்கூத்தாகத்தான் உள்ளன. கேட்கின்ற நமக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான். தேர்வு எழுதிய மாணவர்களுக்கோ வழ்க்கைப் பிரச்னை. 

அச்சம் நிறைந்த இந்த தேர்வுகளை எப்போது எழுதி முடிப்போம் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கும்போது, நீ எழுதிய விடைத்தாள் காணமல் போய்விட்டது என்று தலையில் பாறாங்கல்லைப் போட்டால் அந்தப் பிஞ்சு உள்ளம் தாங்குமா? விடுதலை கிடைத்து வெளியே செல்லும் கைதியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் தள்ளினால் அவன் மன்நிலை எப்படியோ அப்படித்தான் இந்த மாணவனின் மன நிலையும். 

மொழிப் பாடங்களில் ஒரு தாள் காணாமல்போனாலோ சேதமடைந்தாலோ மற்றொரு தாளின் மதிப்பெண்ணைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம், வேறு பாடங்கள் எனில் அரையாண்டு காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற யோசனைகள் நமக்கு சில செய்திகளைச் சொல்கின்றன. பொதுத்தேர்வே இல்லாமல் காலாண்டு அரையாண்டு முழுஆண்டுத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கிவிட்டால் என்ன மனித உழைப்பு, பொருள் செலவு, கால விரையம் என எதுவுமில்லை.  எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லை.

எழுதிய தேர்வுத்தாள்கள் இப்படியென்றால் சில தேர்வுகள் எழுதவே முடியாத அளவுக்கு மாணவர்களை பயமுறுத்துகின்றன. தேர்வுக்கு வினாத்தாள் இப்படித்தான் அமைய வேண்டும் என பாடநூல் எழுதும்போதே வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அதன்படித்தான் வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் பொதுத்தேர்வில் மட்டும் அந்த நடைமுறைகள் காற்றில் பறந்துவிடுகின்றன. இது ஆசிரியர்களிடையே பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன. 

ஆண்டு முழுவதும் பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிச்சயமாக இத்தகைய வினாத்தாள்களை வடிவமைத்திருக்க முடியாது. வடிவமைக்கவும் மாட்டார்கள். அப்படியென்றால் இப்படியான வினாத்தாள்களை வடிவமைப்பது யார்? பாடநூலாசிரியர் குழுவுக்குத் தலைமை ஏற்கும் கல்லூரிப் பேராசிரியர்களா? ஆம், என்றால் ஏன் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள்? அதற்கும் பேராசிரியர்களையே நியமிக்கலாமே. பாடம் கற்பிப்பவருக்கே பாடநூல் எழுதும் உரிமையும் வினாத்தாள் எழுதும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் போராடும் சங்கங்கள் இந்த உரிமைக்காக இதுவரை போராடாமலிருப்பது மர்மமாகவே உள்ளது.

தேர்வில் பழமையான நடைமுறைகள்

அரசுப் பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் துறைதான் நடத்துகிறது. தேர்வு மையங்களைத் தீர்மானிப்பது அவற்றுக்கு எண்கள் வழங்குவது மாணவர்களுக்குத் தேர்வு எண்கள் வழங்குவது வினாத்தாள் அச்சடித்து வழங்குவது ஆகிய சில நடைமுறைகளை மட்டுமே இத்துறை செய்கிறது. அதன்பிறகு தேர்வின் அத்தனை பணிகளையும் ஆசிரியர்கள்தான் செய்கின்றனர். 

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு முதன்மைக்கண்காணிப்பாளர் தேவைக்கேற்ப உதவி கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் எடுத்துச்செல்வதற்கு துறை அலுவலர் என அனைத்தும் ஆசிரியர்கள்தான். அறைக் கண்காணிப்பாளர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நியமிக்கப் படுவர். பறக்கும் படை, நிற்கும் படை, அமரும் படை என முப்படைகளும் மாணவர்கள் காப்பியடிக்காமல் கண்காணிக்கும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை சேகரித்து அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வுத்துறையின் முத்திரையை பதித்து (இந்த நடைமுறை ஏன் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்) துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் அவர் ஒரு உறைக்கு 15 தாள்கள் வீதம் வைத்து திருத்தும் மையத்திற்கு அனுப்பிட வேண்டும். இவைதான் பழைய நடைமுறைகள் என்றால் இந்த பணிகளை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும்  அப்படித்தான். (அறைக் கண்காணிப்பாளருக்கு ஒரு தேர்வுக்கு 60 ரூபாய்). 

இந்த நடைமுறைகள் முடிந்து விடைத்தாள்கள் அங்கு போய் சேர்வதர்க்குள்தான் மேலே சொன்ன அத்தனைக் குளறுபடிகளும் அரங்கேறுகின்றன.இந்த நடைமுறைகள் எல்லாமே பழமையானவை. எல்லா துறைகளிலும் காலத்திற்கேற்ப மாற்றத்தை அனுமதிக்கும் நாம் ஏன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாது?

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்தத் தேர்வுமுறையை மாற்றினால்தான் என்ன? ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ளதுபோல் முழுமையான தொடர் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு தரநிலை அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாமே. நடுவண் கல்வி வாரியத்தில் அப்படித்தானே செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஓர் ஆண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் வாந்தியெடுக்கும் அவல நிலைக்கு ஆளாகாமல், நம் எதிர்கால இந்தியாவின் தூண்களைக் காப்போம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...