Saturday 18 May 2013

NET தேசியத் தகுதித் தேர்வு


முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்குத் தகுதியடைவதற்கும் (Lectureship), முனைவர் ஆய்வுப் பட்டப் படிப்புக்குத் தகுதியுடையவர், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) ஆவதற்கும் பல்கலைக் கழக மாணியக்குழுவால் (UGC - University Grants Commission) நடத்தப்படும் தேர்வு NET - National Eligibility Test.

கலைப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வுகளை பல்கலைக் கழக மாணியக்குழு நடத்துகிறது. அறிவியல் பொறியியல் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தேர்வை பல்கலைக் கழக மாணியக்குழுவும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமும் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து நடத்துகிறது. 

விரிவுரையாளர் பதவிக்கு மட்டுமான தேர்வை எழுத வயது வரம்பு இல்லை. JRF தேர்வை எழுத பொது பிரிவினருக்கு வயது வரம்பு 28 ஆண்டுகள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு மேலும் 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் அதற்குரிய சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது முதுநிலைப் பாடப்பிரிவு, துறையில் இந்த தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். முதுநிலைப் படிப்பில் 55% மதிப்பெண்ணிற்கும் மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள்  50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

UGC-NET:

UGC-NET தேர்வுக்கு http://ugcnetonline.in என்ற முகவரியில் இணைய வழியில் பதிவு செய்யலாம். பொதுப் பிரிவினருக்கு கட்டணம் 450 ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 225 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 110 ரூபாயும் கட்டணம். வங்கியில் பணம் செலுத்திய ரசீதையும், இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தையும் அச்செடுத்து, தேர்வர் தேர்ந்தெடுத்திருக்கும் தேர்வு மையம் உள்ள பல்கலைக் கழகத்திற்கும் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

ஓர் ஆண்டில் இரண்டு முறை இத்தேர்வுகள் நடத்தப்படும். ஜூன் மாதத்தில் ஒரு முறையும் டிசம்பர் மாதத்தில் ஒரு முறையும் நடைபெறும். அந்த மாதங்களின் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வுகள் நடைபெறும்.

இத்தேர்வுகள் மூன்று தாள்களைக் கொண்டிருக்கும். எல்லாத் தேர்வுகளுமே சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா வகையைக் கொண்டவை. தாள்-I மற்றும் தாள்-II ஒவ்வொன்றும் நூறு மதிப்பெண்களைக் கொண்டவை, ஒவ்வொரு தாளுக்கும் கால அளவு 75 நிமிடங்கள். முதல் தாளில் 60 வினாக்களில் இருந்து 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இரண்டாம் தாளில் 50 வினாக்களுக்குமே விடையளிக்க வேண்டும்.  மூன்றாவது தாள் 150 மதிப்பெண்கள் கொண்டவை. இத்தாள் 75 வினாக்கள் கொண்டது, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். முதல் தாள் தேர்வரின் திறனறி சோதனை மற்றும் ஆராய்ச்சி அடிப்படை முறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் மூன்றாம் தாள் தேர்வர் தேர்ந்தெடுத்த பாடங்களை அடிப்படையாகக் கொன்டது. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது கிடையாது.

தேர்ச்சிக்கான மதிப்பெண் அடிப்படை:
ஒவ்வொரு பாடத்திலும், பிரிவிலும் முதல் 15% இடங்களைப் பெறும் தேர்வர்கள் மட்டுமே விரிவுரையாளர் பணிக்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

இதற்கு முன்பு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டியிருந்த மூன்றாம் தாளும் இப்போது கொள்குறி வினா வகைக்கு மாற்றப்பட்டுள்ளது, அதே போல Negative Mark எனப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் பழக்கம் இல்லாததால், அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக யோசித்து, நிதானமாகவே பதிலளிக்கலாம், நேரமும்  தாராளமாகவே இருக்கிறது. ஒரு வினாவுக்கு இரண்டு நிமிடங்கள் வரை கால அவகாசம் உள்ளது. 

CSIR UGC-NET :

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இணைய வழியில் http://csirhrdg.res.in இந்த தளத்தில் விண்னப்பிக்கலாம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது விபிபி  மூலம் பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 200 ரூபாயும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் விதிக்கப்படுகிறது.

200 ம்திப்பெண்களைக் கொண்ட தேர்வுத்தாள் Part- A, Part- B, Part- C என்ற மூன்று பிரிவைக் கொன்டுள்ளது. எல்லாப் பாடங்களும் Part- A பொதுவானது, இப்பிரிவில் பொது அறிவியல், திறனறிதல், ஆராய்ச்சி அடிப்படைகள் தொடர்பான கேல்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 20 கேள்விகளிலிருந்து 15 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். Part- Bயில் தேர்வரது விருப்பத் தேர்வில் இருந்து 50 கேள்விகள் இருக்கும், அவற்றில் 35 கேள்விகளுக்கு பதிலளிக்க வேன்டும். இவ்விரு பிரிவிலும் எல்லாக் கேள்விகளும் இரண்டு மதிப்பெண்கள் கொண்டவை. Part- C பிரிவில், விருப்பத் தேர்வில் இருந்து உயர்நிலைக் கேள்விகள் இடம்பெறும். அறிவியல் கோட்பாடுகளை, கேட்கப்பட்டிருக்கும் சிக்கல்களில் பயன்படுத்தி தீர்வு கானும் விதமான கேள்விகள் இருக்கும். கேட்கப்பட்டிருக்கும் 75 கேள்விகளில் 50 கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேன்டும். ஒவ்வொரு கேள்வியும் நான்கு மதிப்பெண்களைக் கொண்டது. எல்லாப் பிரிவுகளிலும் தவறான விடைகளுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும். 

SLET/SET:

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேறுபாட்டால், தேசிய அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்துவது அனைத்துப் பாடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த போதாது என்பதால் UGC, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த SLET அல்லது SET (State level eligibility test) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அமைப்பு பாடத்திட்டம் அனைத்தும் NET தேர்வையே ஒத்தது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...